Friday, November 26, 2021

ஆச்சர்யமான நிமிடங்கள்

(ஆனந்த விகடன் 14-11-2007 இதழ் - பக்கம் 136 - தளவாய் எழுதியதிலிருந்து)


லா. ச. ரா. தமது 18-வது வயதில் ஆங்கிலத்தில் எழுதிய கதை 'பாபுஜி' . அதை வெளியிட்ட ஆங்கில இதழின் பெயர் 'Short Story'.

நடிகர் சிவகுமார் சொல்கிறார்:

எனக்கு லா.ச. ரா-விடமிருந்து 25-12-2001-ல் ஒரு கடிதம் வந்தது.

"உங்கள் 'இது ராஜபாட்டை அல்ல' தொகுதி படிக்க நேர்ந்தது. ஆலத்தூர் சகோதரர்கள் கச்சேரி கேட்கையில் - அவர்கள் செங்கல் செங்கல்லாகக் கட்டடத்தை எழுப்புகையில் எனக்கு உண்மையாகவே வியர்த்து விறுவிறுத்து விடும். அந்த மாதிரி பிரமிப்புதான் உங்களது தொகுதி படிக்கையில் எனக்கு ஏற்பட்டது" என்று எழுதியிருந்தார். எவ்வளவு பெரிய எழுத்தாளர்! ஓடிச் சென்று, அவரை அவரது வீட்டில் சந்தித்துப் பாதம் தொட்டு வணங்கினேன். 'தாக்ஷாயணி'யில் அவள் அவனிடம் சொல்கிறாள் - 'எப்படியும் நீங்கள் ஆச்சர்யமான நிமிடங்கள் படைத்தவர்!'. அது லா. ச. ரா-வுக்கும் பொருந்தும்.

(11Nov2007ல் எடுத்த குறிப்பு - லா. ச. ரா. வலைப்பதிவு)

லா. ச. ரா.

 

லா. ச. ரா. எழுத்தின் மேலுள்ள ஈடுபாட்டினால் இந்தப் பதிவைத் தொடங்கினேன் - சில பல ஆண்டுகளுக்கு முன்னால். ஆனால் எதுவும் பதிவு செய்யவில்லை. இதுவரை.

இனிமேல் பதிவுகள் பதியப்படும்.

முதல் பதிவே அவரின் மரணத்தைப் பற்றியா? சாசுவதம் மறைவதில்லை. லா. ச. ரா. கடந்த அக்டோபர் 30, 2007 அன்று காலமானார்.

காலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளின் தாக்கத்தை எழுத்தில் வடிகட்டி வடிவமைத்து, பின்னர் காலத்தின் மீதே நடமாடவிட்டவர்.
அவரைப் பற்றிய குறிப்புகள், அவர் எழுத்தின் தகிப்பு, என்று பதிவுகள் செய்யலாம் என்று இருக்கிறேன்.

(10Nov2007ல் லா. ச. ரா. வலைப்பதிவில் எழுதியது. நடைமுறை படுத்தப்படவில்லை.)

மௌனம்

(இந்தியா டுடே-யில் மாலன் எழுதியதிலிருந்து)


லா. ச. ரா. ஒரு சமயம் சொன்னார்:

"வார்த்தைகளின் இலக்கு மௌனம்தான். நான் பேசுவது உன் வாயை அடைக்க. நீ பேசுவது என் வாயை அடைக்க. கடைசி வார்த்தை யாருடையது, who will have the last word - நம்முடையதாகத்தான் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் வார்த்தைகள் மனதை நிரப்புமா? ம்ஹூம். மனது நிறைந்து போகும். அப்போது வாய் அடைத்து விடும். வார்த்தை நின்றுவிடும்."

(22Nov2007ல் எடுத்த குறிப்பு - லா. ச. ரா. வலைப்பதிவு)